பாதுகாப்புப் படையினரை புகழ்ந்த ஜெனரல் கமல் குணரத்ன
கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகளில் இருந்து மக்களை காப்பாற்றும் போராட்டத்தில் சுகாதார தரப்பினரால் செய்ய முடியாத சேவையை பாதுகாப்பு படையினர் செய்து காட்டியுள்ளதாகவும், சுகாதார வைத்திய துறையினரை விட வேகமாக தம்மால் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடிந்துள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார்,
அவர் மேலும் கூறுகையில்,
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலில் இருந்து மக்களை காப்பாற்ற ஜனாதிபதி சகல நாடுகளின் தலைவர்களுடனும் உரையாடி எமக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொடுத்தார்.
ஆனால் தடுப்பூசிகள் கிடைத்தவுடன் வைத்திய துறையினர் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துவிட்டனர். வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர். இதனால் எமது மக்களே பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் மக்களை பாதுகாக்க வேண்டி பாதுகாப்பு படைகளின் உதவியை கொண்டு மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி தீர்மானித்தார்.
அந்த தீமானதிற்கு அமையவே பாதுகாப்பு படையினர் முன்னின்று இந்த சவால்களை வெற்றிகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். சுகாதார துறையினரால் செய்ய முடியாத விடயங்களை இன்று நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
சுகாதார வைத்திய துறையினரை விட வேகமாக எம்மால் மக்களுக்கு தடுப்பூசி வழங்க முடிந்துள்ளது. எமது படைகளில் உள்ள அனுபவம் மிக்க வைத்தியர்களை கொண்டே இந்த சேவையை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
ஆகவே ஒன்றை மட்டுமே நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். மக்களுக்கு பிரச்சினைகள், பாதிப்புகள் வரும் சகல சதர்ப்பங்களிலும் நாம் முன்னின்று மக்களை காப்பாற்றுவோம். எமது சேவையை எவராலும் தடுக்க முடியாது என்றார்.