களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல்; நீதிவான் விலகல்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்றக் களஞ்சியசாலைப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் நீதிவான் ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுச் சொத்துகளைக் கையாடல் செய்தமை தொடர்பான இந்த வழக்கு, புதன்கிழமை (22) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கிலிருந்து நீதிவான் விலகல்
இதன்போது, முன்னாள் நீதிவான் ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் 'நகர்த்தல் மனு' ஒன்றின் ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.
களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிவான் பின்வருமாறு தெரிவித்தார்: "இந்த வழக்கினை வருங்காலங்களில் புதிய நீதிவான் ஒருவரின் ஊடாக நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெற்று, புதிய நீதிவான் ஒருவர் பரிந்துரைக்கப்படுவார்.
அதன் பின்னரே, புதிய நீதிவான் முன்னிலையில் பிணைக் கோரிக்கையை விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிட்ட நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன், சந்தேகநபரை மே 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அத்துடன், தான் இவ்வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாகவும் திறந்த மன்றில் நீதிபதி அறிவித்தார்.