பழங்குடித் தலைவரின் இறுதிச்சடங்கிற்கு இலவச சேவை வழங்கிய ஜும்மா பள்ளிவாசல்
மறைந்த இலங்கையின் பழங்குடித் தலைவர் தனிகல மகாபண்டலகே சுதுவன்னில அத்தானாவின் பூதவுடல், இறுதிச் சடங்குகளுக்காக கொழும்பிலிருந்து பிபிலை நகருக்கு வத்தளை ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா நலன்புரி சங்க வாகனத்தின் மூலம் இலவசமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவம் மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகப் பாராட்டப்படுகிறது.
உடல்நலக் குறைவு காரணமாக, பழங்குடித் தலைவர் சுதுவன்னில அத்தானா கடந்த சில காலமாக வெலிசர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது சிகிச்சைக்காலத்தில் காணி மற்றும் விவசாய சீர்திருத்த இயக்க அமைப்பின் உறுப்பினர்கள் அவரின் தேவைகளையும் நலன்களையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த மே 07 ஆம் திகதி மாலை அவர் உயிரிழந்தார். பின்னர், அவரது பூதவுடலை வெலிசரவிலிருந்து பிபிலை நகருக்கு கொண்டு செல்ல வாகன வசதிக்காக ரூபாய் 80,000 வரை கட்டணம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருந்த அவரது குடும்பத்தினருக்கு அந்தத் தொகையை செலுத்துவது கடினமாக இருந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், வெலிசர மருத்துவமனை காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி மனிதாபிமான அடிப்படையில் தலையிட்டு, வத்தளை ஜும்மா பள்ளிவாசலின் இமாம் மற்றும் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்.
அதற்கு மனமுவந்து இணக்கம் தெரிவித்த வத்தளை பள்ளிவாசலின் ஜனாஸா நற்பணிமன்றத்தினர், மறுநாள் காலை ஊழியர்களுடன் மருத்துவமனைக்கு சென்று, சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பிபிலை நகரின் இறுதிச்சடங்கு மண்டபத்துக்கு பூதவுடலை எந்தவித கட்டணமுமின்றி கொண்டு சென்றுள்ளனர்.
இந்த மனிதநேய செயற்பாட்டிற்காக, உதவிக்கரம் நீட்டிய பொலிஸ் அதிகாரிக்கும், வத்தளை ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி உள்ளிட்ட ஜனாஸா நலன்புரி சங்கத்தினருக்கும் பல தரப்பினரும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.