நீதிபதி இளஞ்செழியனுக்கு அனுர அரசாங்கம் இழைத்த அநீதி; சிவில் சமூக ஆதங்கம்
இலங்கையில் தமிழ் நீதிபதிகளுள் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்ற நீதிபதி மாணிக்க வாசகர் - இளஞ்செழியனுக்கு ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக தீவக சிவில் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் கருணாகரன் நாவலன் தெரிவிக்கையில்,
மக்களின் நன்மதிப்பை பெற்ற நீதிபதி
இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்செழியனுக்கு பாரபட்சமான வகையில் இந்த அரசு பதவி உயர்வு வழங்காமல் பழிவாங்கியுள்ளது.
இதை ஏற்க முடியாது. நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.
ஆனால் அவருக்கான பதவிகள் அந்தந்த காலகட்டத்தில் வழங்கப்படாது அரசுகளால் திட்டமிட்ட வகையில் தட்டிக்களிக்கப்பட்டு வந்தது.
இதன் உச்சமாக தற்போது அனுர அரசும் அனைத்து தகுதிகள் இருந்தும் திட்டமிட்டு அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ள முயற்சித்துள்ளது. இதை எமது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
பதவி உயர்வை தடுத்து ஓய்வு
அந்த வகையில் அரசானது பழிவாங்கலை கைவிட்டு அவருக்கு பதவி உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். பதவி உயர்வுக்கான சூழலை அரசு உருவாக்காவிட்டால் சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கி போராடும் நிலை வரும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் JVP செய்த செயற்பாடுகள் அனைத்தையும் எமது மக்கள் நன்கு அறிவார்கள்.
அதேநேரம் அவர்கள் தமிழ் மக்களை ஒரு பொருட்டாக கண்டுகொள்ள விரும்புவதில்லை. அவ்வாறான தரப்பினர் இன்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கிளீன் சிறீலங்கா என்று கூறி தமிழ் மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகிறது.
மறைமுக பழிவாங்கல் போக்குடனும் செயற்படுவதாக மக்கள் கூறுவதை காண முடிகிறது. ஆனால் ஆட்சியை கைப்பற்ற அனுர தரப்பு மக்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் தென்பகுதியைப் போன்று தமிழ் மக்களையும் அவரவர் தகுதிகளுக்கேற்ப பதவிநிலைகளில் பாரபட்சம் பாராது நியமிக்க வேண்டும் எனவும் கனகரத்தினம் விந்தன் தெரிவித்தார்.