இணையவழி நிதி மோசடிகளை கட்டுப்படுத்த கூட்டு நடவடிக்கை ; சீனா–இலங்கை இடையே பேச்சு
நாட்டில் தற்போதைய சூழலில் பிரதான சவாலாக உருவெடுத்துள்ள இணையவழி நிதி மோசடிகளை இரு நாடுகளின் கூட்டு ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பது குறித்து சீன தூதுவரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் கலந்துரையாடினர்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் இலங்கைகளுக்கான சீனத் தூதுவர் வை ஹுவாஷியாங் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை (01) பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இணையவழி நிதி மோசடிகள்
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒத்துழைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து இச்சந்திப்பில் சுமுகமாக உரையாடப்பட்டது.
குறிப்பாக, தற்போதைய சூழலில் பிரதான சவாலாக உருவெடுத்துள்ள இணையவழி நிதி மோசடிகளை இரு நாடுகளின் கூட்டு ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரின் கவனமும் செலுத்தப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனெவிரத்ன கலந்துக் கொண்டார்.