2 ட்ரில்லியனை கடந்தது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம்
2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதியளவில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது வருமானச் சேகரிப்பில் 2 ட்ரில்லியன் ரூபா எல்லையைக் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இவ்வருட ஜனவரி 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட மொத்த வருமானம் 2,040 பில்லியன் ரூபாவாகும்.

வருமான மதிப்பீடு
2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் சேகரிக்கப்பட்டிருந்த 1,642 பில்லியன் ரூபா வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது 398 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.
2026 ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்த வருமான மதிப்பீடு 2,401 பில்லியன் ரூபாவாவதுடன், செப்டம்பர் 30 ஆம் திகதியளவில் அதில் 85 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, செப்டம்பர் மாதத்தில் மட்டும் 288 பில்லியன் ரூபா வருமானம் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் 216 பில்லியன் ரூபா வருமானத்துடன் ஒப்பிடுகையில் 72 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.
வரி செலுத்துவோரின் தன்னார்வ வரி செலுத்தும் ஆர்வம் மற்றும் வரி நிர்வாகத்தின் திறம்பட்ட செயற்பாடு ஆகியன இந்த வருமான வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.