எங்களுடன் கைகோருங்கள்; பதவி நீக்கப்பட்ட சுசிலுக்கு வந்த அழைப்பு!
ஜனநாயகம் இல்லாத அணியில் இருக்க வேண்டாம் என்றும், எங்கள் பக்கம் வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் எனவும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தரவுக்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார் எம்.பி. கூறுகையில்,
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. குறிப்பாக மக்கள் பிரதிநிதிக்கு, மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் உரிமை இருக்க வேண்டும்.
அந்தவகையில் மக்களின் குரலாகவே சுசில் பிரேமஜயந்த தனது கருத்துக்களை ஒலித்தார். அதற்காக அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஜனநாயகம் இல்லாத, அடக்குமுறை தலைவிரித்தாடும், மக்களின் மன நிலையைப் புரிந்துகொள்ளாத கட்சியில் இனியும் இருக்க வேண்டாம் என்றும், ஜனநாயகத்தை மற்றும் மக்களை நேசிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு சுசில் பிரேம ஜயந்தவுக்கு அழைப்பு விடுப்பதாகவும் மரிக்கார் எம்பி இதன்போது தெரிவித்தார்.