ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ போன்ற நிலமை வரும்; எச்சரிக்கும் பிரதி அமைச்சர்
வாகன இறக்குமதியின் போது செலுத்த வேண்டிய இறக்குமதி வரிகளைச் செலுத்தாமல், சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்காலத்திலும் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தப்படும்போது, தமது குற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

சட்டம் அதன் வழியில் செல்லும்
ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டம் அதன் வழியில் செல்லும். அனைவருக்கும் மேலான ஒரு சட்டம் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அந்தச் சட்டம் ஜனாதிபதிக்கும் பொருந்த வேண்டும். அவ்வாறானதொரு சட்டம் நடைமுறையில் உள்ள நாட்டிலேயே நாம் வாழ விரும்புகிறோம். அதன் மூலமே நாம் எதிர்பார்க்கும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அத்தகைய மாற்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, சிலர் இது சட்டத்திற்கு முரணானது என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறலாம்.
ஆனால், அவ்வாறான கருத்து தார்மீக ரீதியில் சரியானதல்ல என்பதே எனது நிலைப்பாடு” எனவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.