யாழ்.இணுவிலில் கொள்ளையிடப்பட்ட நகைகள் தையிட்டில் மீட்பு
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் களவாடப்பட்ட நகைகள் தையிட்டிப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அண்மையில் இணுவில் பகுதியில் சுமார் 22 பவுன் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் களவாடப்பட்ட சில நகைகள் அண்மையில் மீட்கப்பட்ட நிலையில், திருட்டில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் மீதி நகைகளுடன் தலைமறைவாகி இருந்தார்.
இதனையடுத்து யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தையிட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய நகைகள மீட்கப்பட்டுள்ளது.
அதோடு தலைமறைவான பிரதான சந்தேகநபரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.