யாழ். வலய கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகார வரம்பை மீறிய செயல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகம் தமக்கு அறிக்கை தர வேண்டும் என எழுத்து மூலம் கடிதம் அனுப்பி உள்ளது.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, ஒரு பொது அதிகாரசபை ஒன்று தன் அதிகாரத்திற்கு வெளியே செயற்பட்டு அத்தகைய செயல் அதிகார வரம்பு மீறிய செயலாக வருதல் பின்வரும் 03 வகைக்குள் உள்ளடக்கப்படும்.
தவறான செயலொன்றை செய்தல், சரியான செயலொன்றை பிழையான வழியில் செய்தல், சரியான செயலொன்றை சரியான வழியில் பிழையான நோக்கத்திற்கு செய்தல். இதனடிப்படையில் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் செயலாளரால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையானது சரியான செயலொன்றை பிழையான வழியில் செய்தல் என்ற நடைமுறை ரீதியான அதிகார வரம்பு மீறலென ஆணைக்குழு கருதுகிறது.
மேலும் ஏற்கனவே வலுவில் இருந்த கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளினது இடமாற்றக்கொள்கை வலுவிழந்திருக்கும் நிலையில் புதிய இடமாற்றக்கொள்கையை உருவாக்கி அதன்படி மேற்கொள்ளவேண்டிய இடமாற்றங்களை தன்னுடைய தற்துணிவின் அடிப்படையில் மேற்கொண்டமையானது அதிகார வரம்பு மீறல் செயல் என ஆணைக்குழு கருதுகிறது. இது அடிப்படை உ ரிமைகளில் சட்டத்தின்முன் யாவரும் சமம் என்பதோடு சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கும் உரித்துடையவர்கள் என்ற உறுப்புரை 12(1) இனை மீறும்செயல் என ஆணைக்குழு அவதானித்துள்ளது.
எனவே யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம் வெளிப்படையானதாகவும் கடந்த கால வழக்கங்களை பின்பற்றி முதுநிலை ஒழுங்குவரிசையின் அடிப்படையிலும் மேற்கொள்வதற்கு வடமாகாண ஆளுநரால் மீள்பரிசீலனைச் செய்யப்பட வேண்டுமென இவ் ஆணைக்குழு பரிந்துரைக்கிறது.
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற வழக்கிலக்கமான 2397/18 எனும் வழக்கினை முறைப்பாட்டாளர் உதாரணம் காட்டியதன் அடிப்படையில் மேலும் குறித்த வழக்கிலே மூப்பு அடிப்படையில் வெற்றிடமாக உள்ள கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு நியமனங்களை மேற்கொள்ள பிரதிவாதியான வடக்கு மாகாண கல்வி அமைச்சு அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் முடிவுறுத்தப்பட்டமையும் முறைப்பாட்டாளர் வாதத்திலே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
வலயப்பணிப்பாளர் பதவியானது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட நியமனத்திற்கு முன்னர் ஒரு பதில் நியமிப்பு அடிப்படையில் ஒரு கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்பட்ட நிலையில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படாத நிலையில் கல்வி அமைச்சின் செயலாளரின் சிபரிசின் அடிப்படையிலயே ஒருவரை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தகுந்த காரணங்கள் காட்டப்படவில்லை.
பிரதிவாதத்திலே முறைப்பாட்டாளருக்கு எதிராக குற்றசாட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் குற்றசாட்டுப்பத்திரம் வழங்கப்ட்டதை மாத்திரம் அடிப்படையாயக கொண்டு முறைப்பாட்டளர் குற்றமிழைத்தவர் என அனுமானிக்கமுடியாது என ஆணைக்குழு கருதுகிறது.
எனவே குற்றசாட்டுப்பத்திரம் வழங்கப்பட்டமையினாலயே யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் சிபாரிசில் முறைப்பாட்டாட்டாளர் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவில்லை என்ற பிரதிவாதிகளின் வாதத்தை ஏற்கமுடியாது.
மேலும் ஏற்கெனவே யாழ்ப்பாண வலய பதில் கள்விப் பணிப்பாளரமாக இருந்த இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்த அதிகாரி வலிகாமம் வலயக் கல்விப்ப பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே குறித்த அதிகாரியை யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளராக தொடர்ந்து நிரந்தாமாக நியமிக்க ஏன் கல்வி அமைச்சின் செயலாளரால் சிபாரிசு செய்யப்படடவில்லை என்பதும் அவதானிக்கதக்கது.
எனவே கல்வி அமைச்சின் செயலாளர் சிபாரிசானது தனது விருப்பதெரிவேயன்றி உரிய நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பது ஆணைக்குழுவின் அவதானிப்பாகும்.
இவ்விசரணை அறிக்கையினை வடமாகாண ஆளுநருக்கு முன்னிலைப்படுத்துவதுடன் மேற்படி எமது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் தங்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் 15.07.2025 ற்கு முன் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கவும் இவ்விடயமானது 1996 ஆம் ஆண்டின் 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் தேவைப்படுத்தப்படுகின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.