யாழ் கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் ; காதல் திருமணத்தால் சிக்கல்; உயர் நீதிமன்றின் நெகிழ்ச்சி தீர்ப்பு
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை இந்தியாவில் இருந்து நாடு கடத்தும் முடிவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைத் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து குறித்த யுவதி கடந்த ஜூன் 4ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சிறப்பு திருமணச் சட்டம்
சுற்றுலா விசாவில் இந்தியா சென்ற அந்த பெண்ணின் விசா காலம் முடிந்ததால், அவரை நாடு கடத்த முயற்சித்துள்ளது.
இதனை எதிர்த்து, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து விசாவை நீட்டிக்கக் கோரி குறித்த பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர்களின் திருமணம் சட்டரீதியாக முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட வடிவத்தில் இல்லாவிட்டாலும், மனுதாரர் கர்ப்பமாக இருப்பதையும் தம்பதியின் ஏழ்மை நிலையையும் கருத்தில் கொண்டு நீதிபதி தம்பதியினர் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு 60 நாட்களுக்குள் தங்கள் திருமணத்தைச் சட்டப்பூர்வமாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன் அதுவரை குறித்த பெண் நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்றும் கர்ப்பிணியான பவித்ராவுக்குத் தேவையான அனைத்து அரசு மருத்துவ உதவிகளையும் வழங்க லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ சிக்கலை விட மனிதநேயத்திற்கும் பிறக்கவுள்ள குழந்தையின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
”தன்னை இந்தியாவை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வந்ததாகவும் இந்தியாவில் தொடர்ந்து வசிக்கவே விரும்புகிறேன்” என்றும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.