யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க ஆய்வாளர்களிற்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்
குருநகர் கடற்பகுதியில் கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜை ஒருவரின் உடைமைகள் சில களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, இலங்கை கடற்பரப்பில் அமெரிக்க பிரஜை ஒருவர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து கடந்த 19ஆம் திகதி சிறிய படகொன்றில் வந்துள்ளார்.
படகில் யாழ்ப்பாணம் வந்தவர் குருநகர் கடற்பகுதியில் தனது படகினை நிறுத்தி விட்டு, தங்குவதற்காக யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளார்.
விடுதியில் தங்கி விட்டு மறுநாள் படகுக்கு சென்ற போது, படகில் இருந்த சுழியோடி கண்ணாடிகள், பாதுகாப்பு அங்கிகள், கடல் ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதனை அவதானித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.