அர்ச்சுனாவின் யோசனை வெற்றி ; உரையாற்றும் நேரம் குறித்த புதிய திட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையாற்றும் நேரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றுவோர் அதிக நேரத்தை எடுப்பதாகவும், இதன் காரணமாக, பின்னர் உரையாற்றும் தன்னைப் போன்ற உறுப்பினர்களுக்குரிய நேரம் கிடைப்பதில்லை என்றும் அர்ச்சுனா சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், ஜரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் உரையாற்றும் போது அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் தொலைக்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அவர்களின் நேரம் நிறைவடையும் போது ஒலி வாங்கியும் நிறுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேபோன்றதொரு முறைமையை இலங்கை நாடாளுமன்றத்திலும் நடைமுறைப்படுத்தினால் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிய நேரங்கள் கிடைக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வலியுறுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர், இது குறித்து சபாநாயகருக்குத் தெரியப்படுத்துவதாகவும் அத்துடன், உறுப்பினர்களின் நேரத்தை முகாமைத்துவம் செய்வது குறித்து விரைவில் திட்டமொன்று நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.