யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ; தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற திருகோணமலையைச் சேர்ந்த மாணவி தனுஷ்கா சஞ்ஜீவவிற்கு, ஊடகத்துறையின் உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படும் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஒன்பது அமர்வுகளாக நடைபெற்று வருகின்றது.
இதன் இரண்டாம் நாளான நேற்று (07.10.2026) மாணவி தனுஷ்காவிற்கு குறித்த தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் கல்வி பயின்ற இளம் ஊடகவியலாளர் அமரர் சகாதேவன் நிலக்சன், கடந்த 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் திகதி அதிகாலை, அவரது வீட்டில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது நினைவை நிலைநிறுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 2004ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களாக இருந்த அவரது சக பாடசாலை நண்பர்களால் “நிலா நிதியம்” உருவாக்கப்பட்டது.
இந்த நிதியத்தின் ஊடாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருகின்றது.
திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணவியான தனுஷ்கா சஞ்ஜீவ, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் 10ஆவது இடத்தைப் பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.
ஊடகத்துறையில் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக, அதனைச் சிறப்புக் கலையாகக் கற்ற அவர், தனது கற்கை நெறியின் 43ஆவது அணியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

கல்விக் காலத்தில் திருகோணமலை விவசாயக் கிராம மக்கள் எதிர்கொள்ளும் யானை–மனித மோதல் தொடர்பில் ஆழமான ஆவணப்படம் ஒன்றையும் அவர் தயாரித்துள்ளார்.
அத்துடன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி மற்றும் நிகழ்ச்சிப் பிரிவுகளிலும் பணியாற்றி செயன்முறை அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
அவரது சிறப்பான கல்வித் திறனைத் தொடர்ந்து, தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையில் தற்காலிக உதவி விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
தமக்கு கிடைத்துள்ள இந்த கௌரவம் குறித்து கருத்து தெரிவித்த தனுஷ்கா, ஊடகங்களின் இயல்பையும் சமூகத்தில் அவற்றின் தாக்கத்தையும் ஆழமாகக் கற்றுத் தந்த ஊடகக் கற்கைகள் துறைக்கும், தமக்கு வழிகாட்டிய விரிவுரையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
தனது கல்வி மற்றும் இலட்சியப் பயணத்தில் உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் கணவருக்கும் அவர் நன்றி தெரிவித்ததுடன், ஊடகத்துறையில் சாதிக்கும் மாணவர்களை கௌரவிக்கும் வகையில் “நிலா நிதியம்” மூலம் இந்த வாய்ப்பை ஏற்படுத்தியவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அமரர் சகாதேவன் நிலக்சனின் நினைவாக வழங்கப்படும் இந்த தங்கப் பதக்கம், தனது ஊடகப் பயணத்தில் கிடைத்த மிக முக்கியமான கௌரவமாக அமைந்துள்ளதாகவும் தனுஷ்கா குறிப்பிட்டுள்ளார்.