யாழில் வாளுடன் சென்று மக்களை மிரட்டிய இளைஞர்கள் ; அச்சத்தில் மக்கள்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலிகோவில் பகுதியில், இளைஞர்கள் இருவர் வாளுடன் சென்று அப்பகுதி மக்களை மிரட்டும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரவர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து குறித்த இளைஞர்கள் வாளுடன் சென்று மிரட்டலில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போதிலும், இதுவரை பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, வாளுடன் சென்றதாக கூறப்படும் இளைஞர்களில் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்பப் பெண் ஒருவரின் விரலை வாளால் வெட்டி துண்டாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த இருவரும் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் ஆதரவாளர்கள் எனவும், தேர்தல் காலத்தில் அக்கட்சிக்காக துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வந்தவர்கள் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸாரின் உத்தியோகபூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.
மக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் நடமாடியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.