அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்
எதிர்வரும் ஆண்டு முதல் நாட்டின் வரி முறைமையை மேலும் எளிமையாகவும் இலகுவாகவும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிசாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
சுங்க வரிக்கு மேலதிகமாக அறவிடப்படும் ஏனைய வரிகளை நீக்கி, படிப்படியாக வரி முறைமையை எளிமைப்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் காகிதமற்ற சுங்கப் பிரகடன முறைமையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் எனவும், அனைத்து அரச நிறுவனங்களையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதே அரசாங்கத்தின் இறுதி இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் வணிக சமூகத்தினர் தங்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய தேசிய ஒற்றைச் சாளர (National Single Window) முறைமையை நோக்கி இலங்கை பயணித்து வருவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்காக இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு 2,207 பில்லியன் ரூபாய் வருமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இலக்கை அண்மிக்கும் நிலையை சுங்கத் திணைக்களம் எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வருமானத்தைச் சேகரிக்கும் முறைமை தற்போது மிகவும் முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது சாதகமான சமிக்ஞை எனவும் பிரதியமைச்சர் நிசாந்த ஜயவீர மேலும் தெரிவித்துள்ளார்.