யாழ். தையிட்டி விகாராதிபதியின் கருத்தால் காணி உரிமையாளர்கள் விரக்தி
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை தொடர்பான காணி சர்ச்சை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சட்டவிரோத தையிட்டி விகாரைக்காக தன்னால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பௌத்த சாசன அமைச்சு பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் விகாராதிபதி கலந்து கொண்ட கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை கூடி கலந்துரையாடிய போதே , விகாராதிபதி விகாரைக்கு என அறிக்கைப்படுத்தப்பட்ட காணியில் இருந்து சிறு துண்டு நிலத்தையும் விடுவிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதேவேளை, 19 பேரின் தனியார் காணிகள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்களுக்கு தங்களை அழைக்காமல் ஒருபக்கமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும், விகாரையைச் சுற்றியுள்ள வேலியை பின்நகர்த்த நிதி ஒதுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என தெல்லிப்பழை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்ட கலந்துரையாடல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.