யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து ; காரணம் கண்டறிய விசேட குழு
யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை ஆராய, கொழும்பிலிருந்து அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நாளை (11) யாழ்ப்பாணம் வரவுள்ளனர்.
நேற்று (09) ஏற்பட்ட தீ விபத்தில், களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மருந்துகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை முற்றிலும் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சம்பவ இடத்தைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளருமான ச. சிறிபவானந்தராசா, ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.

தீயில் எரிந்த மருந்துகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் உயர்மதிப்புள்ள முக்கிய மருந்துகளும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், மருத்துவமனையின் உள்ளக மருந்தகத்தில் தற்போது உள்ள மருந்துகளைப் பயன்படுத்தி அவசரத் தேவைகளை சமாளிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில் மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகள், வவுனியா மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளிலிருந்தும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பிலிருந்தும் அவசர அடிப்படையில் மருந்துகளை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிநோயாளர் பிரிவு மற்றும் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்து விநியோகத்தில் தற்போதைக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, குறித்த களஞ்சியசாலை பகுதி பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னரே சேதமடைந்த மருந்துகள் அங்கிருந்து அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.