எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பும் 36 எம்எல்ஏக்கள்? தவெகவுக்கு ஆதரவளிக்க திட்டம்?
தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை உறுதி செய்வதில் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அதிமுகவின் சில எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, ‘லாட்டரி அதிபர்’ என அழைக்கப்படும் மார்ட்டின் குடும்பம் இந்த அரசியல் நகர்வுகளில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் 36 எம்.எல்.ஏக்கள் கொண்ட அணியில், மார்ட்டினின் மனைவியும் அதிமுக எம்.எல்.ஏவுமான லீமா ரோஸ் முக்கிய பங்காற்றி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் இந்த அணியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நகர்வுகளின் பின்னணியில், மார்ட்டினின் மருமகனும், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனாவும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் மொத்தம் 47 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இணைந்தால் நடவடிக்கைகளைத் தவிர்க்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே, லீமா ரோசுக்கு எம்.எல்.ஏ வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டபோதே கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்ததாகவும், தற்போது அதன் விளைவுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய்க்கு தற்போதைய நிலையில் தேவையான ஆதரவை உறுதி செய்வதில் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு முக்கியமாகக் கருதப்படும் நிலையில், அதிமுகவிலிருந்து கூடுதல் ஆதரவு கிடைத்தால் அது அவரது ஆட்சியை மேலும் வலுப்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.
எனினும், இந்த தகவல்கள் குறித்து அதிமுக அல்லது தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.