யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது ; வடக்கு பிரதம சங்க நாயக்க தேரர் அதிர்ச்சி குற்றச்சாட்டு
‘ராஜமகா விகாரை’ என பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தி, இராணுவத்தின் பங்களிப்புடன் காங்கேசன்துறை தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை போலியானது என வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியின் உண்மையான உரிமையாளர்கள் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களே என்பதை ஏற்றுக்கொண்ட வட மாகாண பிரதம சங்கநாயக்க தேரர், அந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி தலையிடாவிட்டால், இனங்களுக்கு இடையில் மோதல்கள் வெடிக்கும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு உறுதிப்பத்திரம் உள்ள காணிகளை யுத்தத்தின் மூலம் கையகப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை, உண்மையான திஸ்ஸ விகாரை அல்ல என நாகதீப புராண ரஜமகா விகாராதிபதியும் வட இலங்கையின் பிரதம சங்கநாயக்க தேரருமான நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர் கூறுகிறார்.

“உண்மையான திஸ்ஸ விகாரை தற்போது உள்ள போலியான திஸ்ஸ விகாரைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அந்த திஸ்ஸ விகாரை நாகதீப விகாரைக்குச் சொந்தமானது. அதன் உரிமை நாகதீப விகாரையிடமே உள்ளது.
ஆனால், இப்போது திஸ்ஸ விகாரை என அழைக்கப்படும் பகுதி காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்குச் சொந்தமானது.
யுத்த காலத்தில் குடிமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு இடத்தையே திஸ்ஸ விகாரை என்ற பெயரில் போலியான திஸ்ஸ விகாரையாக ஆரம்பித்துள்ளனர்.”
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் தன்னைப்போன்று வேறு எந்த பௌத்தரும் இவ்விடயம் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள் என பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர் ஒரு காணொளி உரையின் மூலம் தெரிவித்துள்ளார்.
இராணுவப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம், காங்கேசன்துறை திஸ்ஸ ராஜமகா விகாரையின் விகாராதிபதி சத்தர்மகீர்த்தி சங்கைக்குரிய கிந்தோட்டை நந்தாராம தேரருக்கு, அமரபுர ஸ்ரீ கல்யாணவம்ச நிகாயவின் வட இலங்கையின் உப பிரதம சங்கநாயக்க பதவிக்கான ‘ஸ்ரீ சன்னஸ் பத்ர’ மற்றும் ‘விஜினி பத’ ஆகியவை புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் கொழும்பில் வழங்கி வைக்கப்பட்டதன் பின்னர், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.