கொழும்பு மேயர் விவகாரத்தில் வெடித்த சர்ச்சை ; அரசாங்கத்தை நேரடியாகச் சாடிய எம்.பி
தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், கொழும்பு மாநகர சபையின் மேயராக நியமிக்கப்பட முடியாது என்பதைக் கூட அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி செயலகத்தின் வழிநடத்தலின் கீழ் செயல்படுவதாகக் கூறப்படும் சிலர், உண்மையான பிரச்சினைகளை மறைத்து சமூக ஊடகங்களில் சிறுப்பிள்ளைத்தனமான பதிவுகளை மேற்கொண்டு வருவதாக சாடினார்.

கொழும்பு மாநகர சபையின் மேயர் தேர்வு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், அரசாங்கம் பலாத்காரமாக இரகசிய வாக்கெடுப்பை நடத்த முனைந்ததாகவும், அதற்கு தாம் உள்ளிட்ட பலரும் பகிரங்க வாக்கெடுப்பை வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், உள்ளூராட்சி ஆணையாளரின் ஊடாக மாநகர சபை உறுப்பினர்களின் கருத்துக்களை முறையாகப் பெற்றுக் கொள்ளாமல், அடாத்தாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், உறுப்பினர்களுக்கு பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டதன் மூலம் ஆட்சியை கைப்பற்ற அரசாங்கம் முயற்சித்ததாகவும் அவர் கூறினார்.
பகிரங்க வாக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பொய் வாக்குறுதிகள் மூலம் ஆட்சியை கைப்பற்ற முடிந்தாலும், பொய் சொல்லிக் கொண்டு ஒரு ஆட்சியை நீடித்து நடத்த முடியாது எனக் கடுமையாக தெரிவித்தார்.