யாழ். வாள்வெட்டு சம்பவம் ; நீதி கோரி போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
யாழ்ப்பாண புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த 10-08-2025 அன்று வாள்வெட்டு கும்பலின் கொடூரமான தாக்குதலில் பலியான தனியார் பேருந்து உரிமையாளரின் பூதவுடலை 15-10-2025 அன்று குறிகாட்டுவான் பிரதான வீதியில் பெற்றோல் நிரப்பும் நிலையம் முன்பாக நடுவீதியில் வைத்து கொல்லப்பட்டவரின் குடும்ப உறவுகளும், 150க்கு மேற்பட்ட பொதுமக்களும் இணைந்து போராடியிருந்தனர்.
பேருந்து உரிமையாளர் கொல்லப்பட்ட தினத்திலிருந்து ஐந்தாவது தினம் வரை அதாவது பூதவுடல் அடக்கம் செய்த தினம் வரைக்கும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாதமையினாலும் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவின் கீழுள்ள குறிகாட்டுவான் பொலிஸ் காவலரணில் கடமையாற்றும் சார்ஜன்ட் தரத்திலான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டவரின் வீட்டிற்கு இன்னும் இரு வெளிமாவட்ட நபர்களுடன் மதுபோதையில் சென்று இலஞ்சம் கேட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்கள் வெகுண்டெழுந்து இவ் வீதி மறியல் போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.
இப்போராட்டத்திற்கு தீவகம் சிவில் சமூகம், புங்குடுதீவு உலக மையம் மற்றும் புங்குடுதீவு தனியார் பேருந்து சேவை சங்கம் போன்ற தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் ஆதரவை நல்கியிருந்தன.
அன்றைய தினம் புங்குடுதீவு தனியார் பேருந்து சேவை சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பினையும் மேற்கொண்டிருந்தனர்.
நடைபெற்ற கவனயீர்ப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஐந்து கோரிக்கைகள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டன
1- ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கொலையாளிகள் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும் .
2- இலஞ்சம் கோரிய குறிகாட்டுவான் பொலிஸ் காவலரண் உத்தியோகத்தர் அங்கிருந்து இடம் மாற்றப்பட்டு அவர் மீதும் அவரோடு இணைந்து கொல்லப்பட்டவரின் வீட்டுக்கு வருகை தந்து இலஞ்சம் கோரிய ஏனைய இரு நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
3- கொல்லப்பட்டவரின் வீட்டுக்கு 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்.
4- கடந்த வருடம் வரை ஏற்கனவே நடைமுறையிலிருந்த புங்குடுதீவு மடத்துவெளி, மண்டைதீவு சந்தி பொலிஸ் சோதனை சாவடிகள் மீளவும் அமுல்படுத்தப்பட வேண்டும். 5- புங்குடுதீவு மத்தியில் நிரந்தர பொலிஸ் நிலையம் உருவாக்கப்படவேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் உணர்பூர்வமாக கோஷங்களை எழுப்பி வீதி மறியலில் ஈடுபட்டதால் யாழ் நகரிலிருந்து அங்கு விரைந்து வந்த யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) அக்கோரிக்கைகளை இயன்றவரை உடனடியாக நிறைவேற்றுவதாகவும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறும் சாட்சியாக வீடியோ ஒளிப்பதிவுக்கு முன்னிலையில் பொதுமக்களிடம் தயவு கூர்ந்து கேட்டுக்கொண்டதோடு அந்த இடத்திலேயே குறித்த குறிகாட்டுவான் காவலரண் பொலிஸ் உத்தியோகத்தருக்கான இடமாற்ற உத்தரவு, கொல்லப்பட்டவரின் வீட்டுக்கான முழு நேர பொலிஸ் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தார்.
அத்தோடு போராட்டம் முடிவுக்கு வந்ததோடு கேரதீவு இந்து மயானத்திற்கு அகிலனின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கிணங்க புதைக்கப்பட்டது.
அடுத்த தினம் மண்டைதீவு சந்தி சோதனைச்சாவடி மற்றும் புங்குடுதீவு மடத்துவெளி சோதனை சாவடிகள் மீளவும் அமுல்படுத்தப்பட்டு சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்திருந்தனர்.
ஆனாலும் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான அனலைதீவை சேர்ந்த செல்வகுமார் எனும் நபர் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் தீவகம் சிவில் சமூகத்தின் முயற்சியினால் யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் தென்னியன்குளம் பிரதேச காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்டார்.
சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்ட அனலைதீவு செல்வக்குமார் வழங்கிய வாக்கு மூலத்திற்கமைய இக்கொலையானது யாழ் நகரிலிருந்து பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்த கொலை என்றும் இக்கொலையின் பிரதான சூத்திரதாரியாக புங்குடுதீவு ஏழாம் வட்டாரம் ஊரதீவினை சொந்த இடமாகவும் தற்காலிக முகவரி யாக கொக்குவில் பிரதேசத்தினை வதிவிடமாகவும் கொண்டவர் என்றும் அவரது நெருங்கிய நண்பரான புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரம் கேரதீவினைச் சேர்ந்தவரும் இக்கொலையின் பங்குதாரர் என்றும் தாங்கள் மூவரும் இணைந்தே பேருந்து உரிமையாளரை வெட்டிக் கொலை செய்ததாகவும் கைது செய்யப்பட்ட ஒருவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பேருந்து உரிமையாளரின் பூதவுடலை வைத்து வீதியை மறித்து போராடியமைக்கு எதிராக அதாவது சட்டவிரோத குழுவாக ஒன்று கூடி அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரினால் தீவகம் சிவில் சமூகம் அமைப்பின் செயலாளர் மாணிக்கவாசர் இளம்பிறையன், உப தலைவர் கருணாகரன் குணாளன் ,
வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் இரு பொதுமக்களின் பெயர் குறிப்பிட்டு வழக்கு தாக்கல் மேற்கொண்டு எதிர்வரும் 07- 10- 2025 அன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.