யாழ். சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோவில் வழக்கு தள்ளுபடி
யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் திருப்பணிப் பணிகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு முழுமையாகத் தள்ளுபடி செய்துள்ளது.
வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியின்றி கோவிலின் திருப்பணிப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி, ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்காலக் கட்டளை தொடர்பான விசாரணை நேற்று (31) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர்கள், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கட்டுமானங்களை உடனடியாக அகற்றவும், திருப்பணிப் பணிகளைத் தொடரத் தடை விதிக்கும் இடைக்காலக் கட்டளையைப் பிறப்பிக்கவும் கோரியிருந்தனர்.
விசாரணையின்போது, எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, கட்டட அனுமதி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கே உரியது என்றும், அவற்றை இடிக்க உத்தரவிடும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் வாதிட்டார்.
மேலும், பிரதேச சபையால் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில், மனுதாரர்களின் விண்ணப்பம் முன்கூட்டியதாக (Premature) அமைந்துள்ளதாகவும், முறைசாரான அறிவித்தலுடன் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த வடக்கு மாகாண மேல் நீதிமன்றம், மனுதாரர்களின் இடைக்காலக் கட்டளை கோரிக்கையை நிராகரித்ததுடன், வழக்கையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.