தமிழர்களின் பொக்கிசம் பேரினவாதிகளால் அழிக்கப்பட்டு இன்றுடன் 41 வருடங்கள்
யாழ். பொது நூலகம் எரியூட்டப்பட்டதன் 41 ஆவது வருட நினைவுகூரல் நிகழ்வு இன்றைய தினம் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ். பொதுசன நூலகம் 1981 ஆம் ஆண்டு எரியூட்டப்பட்டு சிதைவடைந்த நிலையில், அது மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் நூலகம் எரியூட்டப்பட்ட தன் 41ஆவது நினைவு தினம் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாநகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர முதல்வர், யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர், யாழ் மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் நூலக உத்தியோகத்தர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், நூலகம் எரியூட்டப்பட்ட சம்பவம் கேள்விப்பட்டவுடன் மாரடைப்பால் உயிரிழந்த அருட்தந்தை மற்றும் நூலக நிறுவுனரின் திருவுருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.
அதேவேளை உலகில் வேறு எங்கும் இல்லாத நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், நூல்கள், வரலாற்று ஆவணங்கள், 1800-களில் யாழ்ப்பாணத்தில் வெளியான பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என மிகப் பெரிய எண்ணிக்கையிலான பொக்கிஷங்களை யாழ்ப்பாண நூலகம் தன்னகத்தே கொண்டிருந்தது.
தமிழ் இனத்தின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த ‘பொது நூலகம்’, பேரினவாதிகளால் திட்டமிட்டு எரிக்கப்பட்டு இன்றோடு 41 ஆண்டுகள் ஆகின்றன. இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981-ம் ஜூன் 4 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையின் பல இடங்களிலிருந்து பொலிசார் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது;. ஜூன் ஒன்றாம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்த ஈழநாடு தினசரி அலுவலகமும், அதற்கு அருகிலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது; அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது.
ஆம், சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு தீயிட்டு எரித்தமை இலங்கையில் மட்டுமல்லாது உலகவாழ் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


