யாழ் நல்லூர் ஆலய வீதி தடை; மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெரும் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகள் தொடர்பில் கலந்துடையாடுவதற்கு மாநகரசபைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
வீதித் தடைகள் தொடர்பில், யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
பாதை தடை தொடர்பில் முறைப்பாடு
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ். மாநகர சபையினால் பொதுமக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் பாதை தடை அமைக்கப்பட்டுள்ளது.
பாதை தடை தொடர்பில் பல தரப்பினராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட முறைப்பாடு தொடர்பில் ஆணைக்குழுவினால் கவனம் செலுத்துப்பட்டுள்ளது.
மேலும் பாதை தடை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாளை வெள்ளிக்கிழமை (09) மு.ப. 11.30 மணிக்கு இல 42, கோவில் வீதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.