வீதிகளை குப்பையாக்கும் யாழ் மாநகர சபை வாகனம்; மக்கள் விசனம்
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம், நாடு முழுவதும் கிளீன் லங்கா திட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாநகர சபையின் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றாது கழிவுகளை திறந்தவாறு கொண்டு செல்வதால் நடு வீதியில் குப்பைகளை கொட்டிச் செல்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம்(04) காக்கைதீவு சந்தையில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் பக்கமாக அண்ணளவாக 200 மீட்டர்கள் தொலைவில் நடு வீதியில் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு காணப்படுகின்றன.
நடு வீதியில் ஏராளமான கழிவுகள்
மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் இடம் காணப்படுகின்றது.
இந்நிலையில் ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் வீதியூடாகவே குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கழிவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும்போது மாநகர சபையின் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றாது கழிவுகளை திறந்தவாறு கொண்டு செல்வதால் கழிவுகள் வீதியில் கொட்டப்படுகிறது.
இந்நிலையில் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளமையால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டவாறு பயணத்தை மேற்கொள்கின்றனர்.
அதேவேளை உள்ளூராட்சி சபைகள் என்பன கிராமங்களையும், நகரங்களையும் அபிவிருத்தி செய்வதையும், தூய்மையை பேணுவதையுமே பிரதான நோக்கமாக கொண்டு காணப்படுகிறன.
இவ்வாறான நிலையில் யாழ். மாநகர சபையே வீதிகளில் குப்பைகளை கொட்டினாய் எவ்வாறு தூய்மையை பேண முடியும் என பிரதேசமக்கள் அங்கலாய்க்கின்றனர்.