போட்டி போட்டுக்கொண்டு சென்ற பேருந்துகள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
யாழ்ப்பாணம் - மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பேருந்து போட்டி போட்டு முழங்காவில் மற்றொரு பஸ்ஸை முந்த முயற்சித்த போது விபத்துகுள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது, பஸ் நிலை தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதவிருந்ததில் நூற்றுக்கணக்கான பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
யாழிலிருந்து நேற்றைய தினம் (18-11-2023) மதியம் 3 மணியளவில் புறப்பட்ட தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு முழங்காவில் முக்கொம்பன் பகுதியில் பயணித்து கொண்டிருந்த நிலையில் பின்னால் வந்த மற்றைய தனியார் பஸ் சாரதியின் செயற்பாட்டால் நிலை தடுமாறியுள்ளது.
பின்னால் வந்த சாரதி வேகமாக வாகனத்தை செலுத்தியதுடன் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் வாகனத்தை செலுத்தியுள்ளார்.
இதன் காரணமாக நிலைதடுமாறிய வாகனம் அருகில் உள்ள ரத்தில் மோதும் விதமாக சென்ற நிலையில் மரத்தை சூழ இருந்த மணல் திட்டு காரணமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் பஸ்ஸில் இருந்து இறக்கப்பட்டு வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டதுடன் பேருந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
தொடர்சியாக மன்னார் - யாழ்பாணம், மன்னார் - வவுனியா வீதிகளில் பேருந்து சாரதிகள் மக்களின் உயிர்களை மதிக்காது, பேருந்துகளை போட்டி போட்டு செலுத்தும் சம்பவங்களும் அதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.