யாழ் குருநகர் இளைஞன் படுகொலை விவகாரம்; நீதவான் விடுத்த உத்தரவு
யாழ் குருநகர் பகுதி இளைஞனை வாளால் வெட்டி கொலை செய்த பிரதான சந்தேகநபர்களை 48 மணித்தியாலம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கவும் தொடர்புபட்ட ஏனையோரையும் உடனடியாக கைது செய்யுமாறு யாழ் நீதவான் பீற்றர்போல் இன்று உத்தரவிட்டுள்ளார்.
யாழில் கடந்த 22 ஆம் திகதி ஊடரங்கு அமுலில் இருந்த நிலையில் இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்தனர்.
இக் கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 20க்கும் மேற்பட்ட நபர்களை தேடி பொலிஸ் குழுக்கள் பல பகுதிகளிலும் களமிறங்கியிருந்தன. இதில் குறித்த கொலைக்கு உடந்தையளித்தமை மற்றும் உதவி செய்தமை தொடர்பில் 8 பேர் வரையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
எனினும் பிரதான சந்தேக நபர்கள் பலர் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் கடந்த திங்கள் கிழமை மாலை சட்டத்தரணி றெமிடியஸ் மூலம் யாழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சரணடைந்தனர்.
சரணடைந்த 6 சந்தேக நபர்களையும் யாழ் நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் முற்படுத்தினர். இதன்போது பொலிஸார் தமது தடுப்புப் காவலில் 48 மணித்தியாலங்கள சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ள அனுமதி கோரியிருந்தனர்.
எனினும் வழக்கை விசாரித்த நீதவான் சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளும் படியும் சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் பகுப்பாய்வு விசாரணைகளை மேற்கொள்ளும் படியும் மேலும் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட முக்கிய சந்தேகநபர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
நீதவானின் உத்தரவிற்கமைய சந்தேகநபர்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.