யாழில் காணி இல்லாதவர்களுக்கு இளங்குமரன் எம்.பி முன்வைத்துள்ள யோசனை
யாழ்ப்பாணத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து வீட்டு வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (17) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தின் கீழ் முதலில் 10 இலட்சம் ரூபாவாக வழங்கப்பட்ட நிதியுதவி 15 இலட்சமாக உயர்த்தப்பட்டதுடன், தற்போது மேலும் 5 இலட்சம் ரூபா அதிகரிக்கப்பட்டு மொத்தம் 20 இலட்சம் ரூபாவாக வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இதன் ஒரு பகுதியாக தற்போது 125 வீடுகளுக்கான காசோலைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போர் மற்றும் இடம்பெயர்வு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டு தேவைகளை விரைவாக நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
காணி இல்லாத குடும்பங்களுக்கும் வீட்டுத்திட்ட நன்மைகளை வழங்கும் நோக்கில், புதிய பொறிமுறையின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக கலந்தாலோசனைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“தற்போதைய சூழ்நிலையில் நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே காணியற்ற மக்களுக்கான நிலையான வீட்டு வசதித் தீர்வாக இந்தத் திட்டம் அமையும்,” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சில வீட்டுத்திட்டங்கள் இன்னும் முழுமையாக நிறைவு செய்யப்படாமல் இருப்பதாகவும், அவற்றை பூர்த்தி செய்வதற்கான நடைமுறைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை, தற்போது வீட்டுத்திட்ட நிதியுதவி பெறும் பயனாளிகள் தங்களது வீடுகளை துரிதமாக நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் வழங்குவார்கள் என்றும் உறுதியளித்தார்.