யாழ். கடற்றொழிலாளர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை ; நாமல் கவலை
யாழ்ப்பாணம், பலாலியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் தாக்கப்பட்டு தற்போது இந்தியாவின் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் விவகாரம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் கடுமையான கவலையை வெளியிட்டுள்ளார்.
கடலில் இருந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் குழுவினரால் தாக்கி அழைத்து செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்துள்ள குறித்த கடற்றொழிலாளர் தற்போது இந்தியாவின் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பலாலி காவல்நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சு உடனடியாகத் தலையிட்டு, தூதரக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு கடற்றொழிலாளர் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம், இந்திய – இலங்கை கடல் எல்லைப் பகுதியில் கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது.
இது தொடர்பில் அரச தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.