யாழ். சாவக்ச்சேரியிலிருந்து வெளியேறி கொழும்புக்குச் சென்ற வைத்தியர் அர்ச்சுனா
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட பல்வேறு நிர்வாக, மருத்துவச் சீர்கேடுகளைத் தனது சமூக வலைத்தளம் மூலமாக வெளியிட்டதன் மூலம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்வைப் பெற்றிருந்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா இன்று திங்கட்கிழமை மதியம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை விட்டு இரு நாட்கள் தற்காலிகமாக வெளியேறி கொழும்பிற்கு சென்றுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பூதாகரமாக வெடித்திருந்தது. இந்நிலையில் ஒருபுறம் மக்கள் போராட்டம் இடம்பெற - மறுபுறம் பதில் வைத்திய அத்தியட்சகரை வெளியேற்றுவதற்கான காய் நகர்த்தல்கள் இடம்பெற்றிருந்தன.
இதேவேளை வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து வட மாகாண அரச வைத்தியர்கள் இன்று பணிப் புறக்கணிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். இந் நிலையில் பதில் வைத்திய அத்தியட்சகரை பேச்சுவார்த்தைக்காக கொழும்பிற்கு அழைத்திருந்த நிலையில் இருநாள் விடுமுறையில் கொழும்பிற்கு சென்று மீண்டும் வருவேன் என மக்களிடம் உறுதியளித்து சென்றுள்ளார்.
இது தொடர்பாக பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கருத்துத் தெரிவிக்கையில்; "வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்னை வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறே கூறியுள்ளார்.
ஆனால் இவ் விடயம் தொடர்பாக பாராளுமன்றில் பேசி முடிவெடுக்கப்படவுள்ள நிலையிலும் என்னோடு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தும் முகமாகவுமே என்னை கொழும்பிற்கு அழைத்துள்ளனர்.
நான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராகவே கொழும்பு சென்று வரவுள்ளேன். ஆனால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தானே வைத்திய அத்தியட்சகர் எனத் தெரிவிக்கின்றார்.
அந்த முடிவை நீதிமன்றம் தான் எடுக்க வேண்டும். தற்போதும் சட்டப்படி நானே பதில் வைத்திய அத்தியட்சகர்.எனவே மக்கள் பதற்றமடையவோ/குழப்பமடையவோ தேவையில்லை.மக்கள் என் மீது வைத்த அன்புக்கு நன்றி.மீண்டும் வருவேன்" என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
வைத்தியர் அர்ச்சுனாவின் உறுதிமொழியை ஏற்ற பொதுமக்கள் வைத்தியரை வழியனுப்பியதுடன் போராட்டத்தை நிறைவுக்கும் கொண்டு வந்திருந்தனர். பெருமளவு பொதுமக்கள் A9 வீதியின் இரு மருங்கிலும் குவிந்திருந்ததோடு காவலுக்கு பொலிசாரும் பெருமளவில் நின்றிருந்தனர்.
இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ளஸ் ஆகியோருடான கலந்துரையாடலில் அமைச்சர் இதனை வெளிப்படுத்தினார்.
மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான சூழலை ஏற்படுத்துவதற்கு, குறித்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு விடுமுறை வழங்குவதுடன், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களை மீளவும் கடமைக்கு திரும்பச் செய்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை முதற் கட்டமாக ஆரம்பிப்பது,
பின்னர், விசாரணைக் குழு ஒன்றினை நியமித்து, வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள், அவை நீண்ட காலமாக நிவர்த்தி செய்யப்படாமைக்கான காரணம், மற்றும் வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் போன்றவை தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, அதனடிப்படையில் இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்ளுவது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.