பேருந்தில் தவறுதலாக மாறிய பை; கட்டுக்கட்டாக கிடந்த பணம் ; மாணவன் செய்த செயல் !
பேருந்தில் பயணம் செய்த போது தவறுதலாக மாறி வந்த பையிலிருந்த 10 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை, உரியவரிடம் ஒப்படைத்த மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
11ஆம் தர மாணவன் ஒருவனே இவ்வாறு பணத்தை, உரியவரிடம் ஒப்படைத்து முன்மாதிரியாகச் செயற்பட்டுள்ளான்.

மாணவனின் நேர்மைக்கு பாராட்டு
தெல்கொட பகுதியிலிருந்து மாலம்பே மாதிரி ஆண்கள் பாடசாலைக்கு பேருந்தில் பயணித்த அகில தேசப்பிரிய என்ற மாணவனின் பாடசாலைப் பை, மற்றுமொரு பயணியின் பையுடன் தவறுதலாக மாறிப்போயுள்ளது.
பாடசாலைக்குச் சென்று தனது பையைத் திறந்து பார்த்த மாணவன், அதற்குள் 5000 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக இருப்பதைக் கண்டு, உடனடியாக பாடசாலை அதிபர் சிசிர குணரத்னவிடம் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து அதிஅர் ஊடாக, குறித்த பையிலிருந்த வங்கிப் புத்தகம் ஒன்றின் உதவியுடன், சம்பந்தப்பட்ட வங்கியினைத் தொடர்பு கொண்டு பணத்தின் உரிமையாளர் யார் என்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுகேகொடைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே அந்தப் பணத்தின் உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளது. தனது வீட்டை நிர்மாணிப்பதற்காக வங்கியில் இருந்து இந்தப் பணத்தை அவர் எடுத்துச் சென்றுள்ளார்.
சம்பவம் குறித்து மாலம்பே காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, இரு தரப்பினரும் காவல்துறை நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, நிலையப் பொறுப்பதிகாரியின் முன்னிலையில் 10 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாயும் உரிய ஆசிரியையிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் வறுமை மற்றும் தேவைகள் நிறைந்த சூழலிலும், பேராசை கொள்ளாமல் நேர்மையாகச் செயற்பட்ட மாணவன் அகில தேசப்பிரியவை பொலிஸார் மற்றும் பாசடாலை அதிபர் ஆசிரியர்களும் பாராட்டி வருகின்றனர்.