யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிக்கு திடீர் இடையூறு
யாழ்ப்பாணத்தில் இன்று (8) திடீரெனப் பெய்த மழை காரணமாக, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
முக்கிய நபர்களின் மரணங்கள் குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் ; சமூக வலைத்தளங்களில் வலுக்கும் சந்தேகம்
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 11-ஆம் நாள் பணிகள் இன்று காலை ஆரம்பமாகின.
பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், மதிய நேரத்தில் பெய்த பலத்த மழையினால் அகழ்வுப் பகுதிக்குள் வெள்ள நீர் தேங்கியது.

இதனைத் தொடர்ந்து, நல்லூர் பிரதேச சபையின் பவுசர்' இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, தேங்கியிருந்த நீர் வெளியேற்றப்பட்டது.
இன்றைய அகழ்வுப் பணியின் போது புதிதாக ஒரு மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளில் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மொத்தம் 260 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 256 தொகுதிகள் இதுவரையில் முழுமையாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை சனிக்கிழமை 12-ஆம் நாள் அகழ்வுப் பணிகளை அரை நாள் மாத்திரம் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், மீண்டும் மழை பெய்து இடையூறு ஏற்பட்டால், நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
அவ்வாறான சூழலில், இன்னும் ஓரிரு வாரங்களின் பின்னர் நீதிமன்றம் குறிப்பிடும் ஒரு திகதியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.