ஈழத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயத்தில் பிக்குகளால் பதற்றம்!
யாழ்ப்பாண மாவட்டம் சுழிபுரத்தில் உள்ள பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர்.
இந்த செயலை தடுத்து நிறுத்துவதற்கு மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈழத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பறாளாய் விநாயகர் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்திற்கு அருகே முருகன் ஆலயமும் உண்டு. இந்த ஆலய வளாகத்தில் உயரமாக வளர்ந்த அரச மரம் காணப்படுகின்றது.
இந்த ஆலயத்திற்கு அண்மைக்காலமாக வழிபாடு என்ற போர்வையில் படையினரின் உதவியுடன் பௌத்த பிக்குகள் அடிக்கடி வந்து சென்றனர்.
இந்த நிலையில் நாளை வியாழக்கிழமை (16-03-2022) பௌர்ணமி தினத்தன்று இங்குள்ள அரச மரத்தடியில் படையினரின் உதவியுடன் பிக்குகள் வழிபாடுகளில் ஈடுபட முனைப்புக் காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் ஆலய நிர்வாத்தில் உள்ளவர்களுக்கும் பிக்குகள் தெரியப்படுத்தியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
பௌத்த பிக்குகளின் மேற்படி நடவடிக்கையை தடுத்து நிறுத்தி பறாளாய் விநாயகர் மற்றும் முருகன் ஆலயங்களை ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து பாதுகாப்பதற்காக இன்று (16.03.2022) புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆலய வளாகத்தில் பொதுக் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் யாரும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.