12 பேருடன் சென்னையில் இருந்து யாழ் சர்வதேச விமானநிலையத்திற்கு வந்த விமானம் !
யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையேயான நேரடி விமான சேவை 2 வருடங்கள் கழித்து டிசெம்பர் 12ஆம் திகதி இன்று காலை மீண்டும் ஆரம்பமானது.
இந்நிலையில் இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் உடைய சிறிய ரக விமானம் யாழிற்கு வந்துள்ளது. முதல் நாள் என்பதால் இன்று மிகவும் குறைவான பயணிகளாக 12 பேர் மட்டுமே சென்றனர்.
முதல் விமானம் காலை 10.15 மணிக்கு தாமதமாக யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு சென்றது. வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு இருந்த யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகள், தற்போது திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
காலை 9.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம், காலை 10.50 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடைகிறது.
மீண்டும் காலை 11.50 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பகல் 1.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வருகிறது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளதால், சென்னையில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த விமானசேவை மிகவும் வசதியாக இருக்கும்.
மேலும் இலங்கை தமிழ் மக்களுக்கும், இந்த விமான சேவைகள் பெரும் உதவியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
முதலாம் இணைப்பு
யாழ். பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்காக விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.
அதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் இன்று முதல் சென்னைக்கு பலாலியில் இருந்து விமான சேவையை ஆரம்பிக்கின்றது.
வாரத்திற்கு நான்கு சேவைகள்
வாரமொன்றுக்கு இந்த விமான சேவை நிறுவனத்தினால் நான்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நல்லாட்சி காலத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பலாலி விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று முதல் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.