யாழ்ப்பாணம் - சென்னை விமான போக்குவரத்து இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்கும்!
சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமானபோக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை நிதிநெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு உதவும் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவும் இலங்கையும் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான சேவையை மூன்றுவருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பித்துள்ளன.
கொரோனா பெருந்தொற்று
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று விமானசேவைகள் ஆரம்பமாகியுள்ளது. சென்னையிலிருந்து அலையன்ஸ் எயர்சேவிசின் விமானம் இலங்கை நேரப்படி 11.25க்கு தரையிறங்கியது.
தெரிவு செய்யப்பட்ட பயணிகளுடன் ( அனேகமாக அதிகாரிகள்) தரையிறங்கிய விமானத்தை வரவேற்பதற்காக சிறிய நிகழ்வொன்றும் இடம்பெற்றது.
அலையன்ஸ் எயர் பிளைட் வாரத்திற்கு நான்கு தடவைகள் இரு நகரங்களிற்கும் இடையில் விமானசேவையை நடத்தவுள்ளது.
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானநிலையம்
2019 இல் பலாலி விமானநிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் என பெயர்மாற்றப்பட்ட நிலையில் இது இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானநிலையமாக மாறியது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தை மீளஅபிவிருத்தி செய்வதற்கான நிதியை இலங்கையும் இந்தியாவும் வழங்கியிருந்தன. இலங்கைக்கு பெரும் வருமானம் ஈட்டித்தரும் மார்க்கமாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.
எனினும் கொரோனாபெருந்தொற்று இலங்கையின் சுற்றுலாத்துறையை முற்றாக முடக்கிய நிலையில் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான முக்கிய காரணமாக அது காணப்படுகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமானசேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை நிதிநெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றதாகவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.