சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ் வைத்தியர் உண்ணாவிரதம்!
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் தாதியர்களின் அசமந்தத்தால் உயிரிழந்த சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாணம் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியாக இருந்து சிறப்பான முறையில் அப்பகுதி மக்களுக்கு சேவையாற்றி வந்த மருத்துவர் செந்துாரன், அண்மையில் சாவகச்சேரி வைத்தியசாலை சம்பவத்தில் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி பொதுமக்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.