மன்னார் சிந்துஜாவிற்கு நீதி கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்; தாய்க்கான போராட்டத்தில் பிஞ்சுக்குழந்தை!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இன்று (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் பிஞ்சுக்குழந்தை
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கருப்பு துணியால் தனது வாயை கட்டி, கையில் கருப்புக் கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த மாதம் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக அமுனதிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் தாயான சிந்துஜா , நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்ந்திருந்தார்.
இந்நிலையில் சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை குறித்த போராட்டத்தில் உயிரிழந்த சிந்துஜாவின் தாயார், சிந்துஜாவின் பிஞ்சுக்குழந்தையுடன் கலந்து கொண்டிருந்தமை பார்ப்பவர் நெஞ்சங்களை கலங்க செய்திருந்தது .