விநாயகர் சதுர்த்தியில் இந்த பொருட்களை படைத்து வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம்
இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத்தைக் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாள் சுவையான நைவேத்தியங்கள் இல்லாமல் முழுமையடையாது. விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவென்றால் அது கொழுக்கட்டைதான் என்று நாம் நன்கு அறிவோம்.

ஆனால் விநாயகரின் அருளை பெறுவதற்கு இந்த கொழுக்கட்டை மட்டுமே போதாது, அவருக்கு மிகவும் பிடித்த வேறுசில பொருட்களும் உள்ளன. இந்த பொருட்களை வைத்து விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த பதிவில் விநாயகருக்கு வைத்து வழிபட வேண்டிய புனித பொருட்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

கொழுக்கட்டை
வட இந்தியாவில் மோதகம் என்று அழைக்கப்படும் கொழுக்கட்டை இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நிறைவு பெறாது. இது விநாயகருக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு என்பதால், விநாயகர் சதுர்த்தியன்று அவருக்கு இது கட்டாயம் படைக்கப்பட வேண்டும். கொழுக்கட்டை என்பது அரிசி மாவினால் செய்யப்பட்டு, உள்ளே துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் நிரப்பப்பட்ட ஒரு இனிப்பு வகையாகும். விநாயகரை வழிபடும்போது மோதகம் இல்லாவிட்டால் அந்த வழிபாடு முழுமையடையாது.

அருகம்புல்
விநாயகருக்கு மிகவும் பிடித்த பொருட்களில் அருகம்புல் ஒன்றாகும். இது அடிப்படையில் வயல்வெளிகளில் தானாக வளரக்கூடிய, மூன்று கிளைகளைக் கொண்ட ஒரு வகை புல் ஆகும். விநாயகருக்கு ஏன் அருகம்புல் மிகவும் பிடித்தமானது என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. ஒருமுறை, தேவர்களைத் துன்புறுத்தி வந்த 'அனலாசுரன்' என்ற தீய அரக்கனை விநாயகர் விழுங்கினார். ஆனால், அந்த அரக்கன் செரிக்காமல் போனதால் விநாயகர் கடுமையான வயிற்று எரிச்சலால் அவதிப்பட்டார். அப்போது சில முனிவர்கள் அவர் மீது அருகம் புற்களைத் தூவ, அவரது வயிற்று எரிச்சல் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. அன்று முதல், இந்தப் புல் விநாயகருக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியது.

சாமந்திப் பூக்கள்
விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட விநாயகர் சிலையை வீட்டிற்கு எடுத்து வரும் போது சிலையை அலங்கரிக்க சிவப்பு மற்றும் மஞ்சள் நிறச் சாமந்திப் பூக்களைப் பயன்படுத்து வேண்டும். விநாயகருக்குச் சாமந்திப் பூக்கள் மிகவும் பிடிக்கும். பெரும்பலான விநாயகர் கோவில்களில் அவருக்கு சாமந்திப் பூக்கள் மற்றும் அருகம்புல்லால் ஆன மாலைகளை அணிந்திருப்பதை நாம் காணலாம்.

சங்கு
விநாயகருக்கு நான்கு கைகள் உள்ளன; அவற்றில் ஒன்றில் அவர் சங்கை ஏந்தியுள்ளார். பல இந்துப் பண்டிகைகள் சங்கு முழக்கத்துடனேயே தொடங்கப்படுகின்றன. விநாயகருக்கும் சங்கு நாதம் மிகவும் பிடிக்கும். விநாயகருக்கு ஆரத்தி எடுக்கும்போது பலர் தங்கள் வீடுகளில் சங்கு முழங்குகின்றனர். அந்தத் தீட்சண்யமான ஒலி தீய சக்திகளை விரட்டியடிக்கும் என்று நம்பப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று பூஜையின் போது சங்கொலியை எழுப்புவது நல்லது.

தேங்காய், வாழைப்பழம்
தேங்காயும், வாழைப்பழமும் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களாகும். விநாயகர் யானை முகத்தானாக இருப்பதால் , அவருக்கு வாழைப்பழங்கள் மற்றும் வாழை மரத்தின் அனைத்துப் பாகங்கள் மீதும் மிகுந்த விருப்பம் உண்டு. பொதுவாக, அவரது திருவுருவச் சிலைகள் வாழை இலைகள் மற்றும் வாழைத் தண்டுகளால் சூழப்பட்டிருக்கும்.

எருக்கம் பூ
எருக்கம் மலர்கள் ஒருவரின் உடல் மற்றும் மனதிலிருந்து எதிர்மறை ஆற்றலை நீக்கும் ஆற்றல் உண்டு. விநாயகருக்கு எருக்குப் பூக்களால் ஆன மாலையைச் சாற்றி வழிபடுவது, பக்தர்களுக்கு நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை அருளும்.
