பட்ஜெட் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் ; சாணக்கியன் எம்.பி அறிவிப்பு
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு இலங்கை தமிழரசுக் கட்சித் தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் ஜனாதிபதி மீது இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார்.
நாங்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான கட்சியாகும். இதனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்பது தொடர்பில் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

ஜனாதிபதி மீது இன்னும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். அடுத்த வாரத்தில் எமது கட்சியுடன் பேசுவதற்கு எமக்கு நேரமொன்றை வழங்கியுள்ளார்.
எமக்கு பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. நாங்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.
எமது கோரிக்கைகள் தொடர்பில் செவிசாய்ப்பார் என்று நம்பிக்கை கொள்கின்றோம் இதனால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளோம் என எம்.பி சாணக்கியன் கூறியுள்ளார்.