அரசின் புதிய சட்ட முயற்சிக்கு தமிழரசுக் கட்சி நேரடி எதிர்ப்பு ; சுமந்திரனின் விசேட அறிக்கை
நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், அதற்கு மாற்றீடாகக் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டமூலத்தை எதிர்க்க வேண்டும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இச்சட்டங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்துப் போராட்டங்களிலும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மிகுந்த முனைப்புடன் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எமது நீண்டகாலக் கோரிக்கையாகும்.
இதனை வலியுறுத்திக் கையெழுத்துப் போராட்டங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களை நாம் நீண்டகாலமாக முன்னெடுத்து வந்துள்ளோம்.
இந்நிலையில், தற்போதுள்ள சட்டத்துக்கு மாற்றீடாக 'அரசைப் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டமூலம்' என்ற பெயரில் புதிய சட்டமொன்றை இயற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.
இப்புதிய சட்டமூலம் எக்காரணம் கொண்டும் நிறைவேற்றப்படக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
எனவே, இந்தச் சட்டங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்துப் போராட்டங்களிலும் எமது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் மிகுந்த முனைப்புடன் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்றுள்ளது.