பிரசாரக் கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் தொடர்பில் விஜய் கருத்து!
இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதும், அவர்களது கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் எமது கடமை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டின் போது இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தான் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதாகத் தெரிவித்த விஜய், இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மட்டுமல்ல, இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது எமது கடமை எனவும் குறிப்பிட்டார்.
மேலும், எமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் உலகத்தின் எங்கு இருந்தாலும், தாயின் அன்பைக் காட்டிய தலைவனை இழந்த அவர்களுக்காகவும் குரல் கொடுப்பதும் எமது கடமை எனவும் விஜய் தெரிவித்தார்.
அத்தோடு, இந்திய கடற்றொழிலாளர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஈழத்தமிழர்களின் கனவுகளும் அவர்களது வாழ்க்கையும் மிக முக்கியம் எனவும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறினார்.