இஷாரா செவ்வந்தி நாட்டைவிட்டு தப்பியோட உதவிய யாழ் நபர்; திடுக்கிடும் தகவல்!
கனேமுல்ல சஞ்சீவ கிலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நாட்டைவிட்டு தப்பியோட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உதவியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 05 சந்தேகநபர்களை விரைவில் இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கைது
கொழும்பு புதுக்கடை நீதிமன்றுக்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஷாரா செவ்வந்தியுடன் , மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரில் கெஹேல்பத்ர பத்மேவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் நேபாள காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதலின் போது இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைக்காக கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ, சாட்சிக் கூண்டில் நின்ற போது, சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை கெஹேல்பத்ர பத்மேயின் உத்தரவின்பேரில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு உதவி புரிந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், சட்டப்புத்தகத்துக்குள், மறைத்து வைத்து துப்பாக்கிதாரிக்கு, துப்பாக்கி ஒன்றை கொண்டு சென்று வழங்கியதாக கூறப்பட்ட இஷாரா செவ்வந்தி இதுவரை காலம் தலைமறைவாகியிருந்தார்.
இந்தநிலையில், அண்மையில், இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட கெஹேல்பத்ர பத்மே உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இஷாரா செவ்வந்தி, நேபாளத்தின் காத்மண்டு நகரை அண்மித்த பகுதியில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
கெஹேல்பத்ர பத்மேவுடன் செயற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜே.கே.பாய் என்பவரின் உதவியுடன் இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டு நான்கு நாட்களின் பின்னர், இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு சென்றுள்ளதுடன், அங்கு மூன்று வாரங்கள் தங்கியிருந்துள்ளார்.
அதன் பின்னர் இந்தியாவிலிருந்து அவர் நேபாளத்திற்கு சென்று தலைமறைவாகி இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.