நாட்டில் 10 ஆயிரம் ரூபா நாணயத்தாள் அச்சிடப்படுகின்றதா?
இலங்கையில் பண வீக்கம் அதிகரித்து வரும் நிலையில் 10 ஆயிரம் நாணய தாளை அச்சிட தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் நாணயம் அச்சிடுவது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை, நிதியமைச்சும் அவ்வாறு ஆலோசனை வழங்கவுமில்லை எனவும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
வெளிநாட்டு கையிறுப்பினை அதிகரித்துக் கொள்வதற்காக உரிய திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்மாதத்திற்குள் வெளிநாட்டு கையிருப்பினை 3 மில்லியன் டொலர்களினால் அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதோடு டொலர் நெருக்கடி காரணமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும் எதிர்வரும் மாதம் எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத அளவிற்கு நாட்டில் நிதி நெருக்கடி நிலை ஏற்படும் என அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் முழுமையாக கண்டிக்கத்தக்கது என கூறிய அவர் , எக்காரணிகளுக்காகவும் அத்தியாவசிய பொருள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்தார்.