பிராந்திய நாடுகளிடம் மன்னிப்பு கோரும் ஈரான் ஜனாதிபதி; தொடரும் தாக்குதல்
பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்காக ஈரான் ஜனாதிபதி மன்னிப்பை கோரியுள்ளார்.
நிபந்தனையற்ற சரணடைவுக்கான அமெரிக்காவின் கோரிக்கை, "அவர்கள் தங்களது கல்லறைக்கே கொண்டு செல்ல வேண்டிய ஒரு கனவு" என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் தீவிர தாக்குதல்
ஈரானிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட உரையில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
அதேவேளை, பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்காக அவர் மன்னிப்பு கோரியதுடன், தெஹ்ரான் தாக்குதல்களை நிறுத்தும் என்றும் உறுதியளித்தார்.
தாக்குதல்கள் படைகளுக்கு இடையிலான தொடர்பாடல் குறைபாடுகளால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், இன்று (07) காலை வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் தீவிரத் தாக்குதல்களை நடத்திய போதே இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய நாடுகளின் மீது இன்று காலை மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அதேவேளை துபாயில் சனிக்கிழமை காலை பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், தமது வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் செயற்படுத்தப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.