டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்புச் சத்தம்; அச்சத்தில் உலக நாடுகள்
ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று (07) டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
விமானங்களைக் கண்காணிக்கும் Flightradar24 இணையதளத் தரவுகளின்படி, துபாய் விமான நிலையத்திற்கு மேலாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் தாக்குதலால் அதிரும் உலகம்
இது குறித்து டுபாய் ஊடகப் பிரிவு (Dubai Media Office), எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வான் பாதுகாப்பு கட்டமைப்பினால் இடைமறித்து அழிக்கப்பட்ட சிதைவுகள் வீழ்ந்ததன் காரணமாக ஏற்பட்ட ஒரு சிறிய சம்பவம்" என விவரித்துள்ளதுடன், அதே பதிவில் விமான நிலையம் குறித்து பரவி வரும் ஏனைய செய்திகளை மறுத்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து போர் வெடித்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று துபாய் விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் நான்கு ஊழியர்கள் காயமடைந்ததுடன், ஒரு முனையமும் சேதமடைந்தது.
அந்தச் சம்பவம் "விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டது" என்று துபாய் விமான நிலைய அதிகாரிகள் அப்போது தெரிவித்திருந்தனர், இருப்பினும் மேலதிக விவரங்கள் எதனையும் அவர்கள் வெளியிடவில்லை.
ஈரானியத் தாக்குதல்கள் அபுதாபி விமான நிலையம், பாம் ஜுமேரா (Palm Jumeirah) மற்றும் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் (Burj Al Arab) ஆடம்பர ஹோட்டல் ஆகிய இடங்களையும் தாக்கியுள்ளன.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலக்குகள் மீது தினசரி ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் போதிலும், சர்வதேச போக்குவரத்தில் உலகின் பரபரப்பான விமான நிலையமான டுபாயின் பிரதான விமான நிலையத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கிய நிலையில் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.