இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு ; அடுத்தடுத்து பலி வாங்கப்படும் முக்கிய புள்ளிகள்!
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிப் (Esmail Khatib), கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் படைகளால் நேற்றிரவு (17) முன்னெடுக்கப்பட்ட வான்வழித் தாக்குதலில் அமைச்சர் எஸ்மாயில் காதிப் (Esmail Khatib) இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்களில் மூன்றாவது முக்கியத்துவம் வாய்ந்த படுகொலை
இந்தச் சம்பவம் குறித்து ஈரான் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ கருத்துக்களையும் அல்லது உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை எனவும் அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து தெஹ்ரான் தரப்பு எவ்விதக் கருத்தையும் தெரிவிக்கவோ அல்லது அதனை உறுதிப்படுத்தவோ இல்லை.
புதன்கிழமை அறிவிக்கப்பட்ட இந்தக் கூற்று உறுதிப்படுத்தப்படுமாயின், கடந்த இரண்டு நாட்களில் ஈரானியத் தலைவர்கள் மீது நடத்தப்படும் மூன்றாவது முக்கியத்துவம் வாய்ந்த, உயர்மட்டப் படுகொலையாக இது அமையும் என அல்ஜெஸீரா குறிப்பிட்டுள்ளது .
செவ்வாய்க்கிழமையன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட, ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் துணை இராணுவப் படையின் தலைவர் கோலம்ரேஸா சுலைமானி ஆகியோரை இஸ்ரேல் படுகொலை செய்திருப்பது, ஈரானுக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.
இவ்விருவருக்கும் ஈரானில் புதன்கிழமையன்று இறுதிச் சடங்குகள் நடைபெறும். எனினும், லாரிஜானியின் படுகொலை ஈரானின் தலைமைத்துவத்திற்கு ஈடுசெய்ய முடியாத அல்லது மரண அடியை ஏற்படுத்தாது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்