அணு ஆயுதங்களை ஈரான் முற்றிலும் நீக்க வேண்டும் ; நெதன்யாகு எச்சரிக்கை
அணுசக்தி ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டு, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய தாக்குதல் நடவடிக்கைகள் 40 நாட்கள் நீடித்தன.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் மூலம் பிராந்திய பதற்றம் ஓரளவு குறைந்தது. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் நடைபெற்றன.

சுமார் 21 மணிநேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தைகளில் எவ்வித இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை என அமெரிக்கா பின்னர் அறிவித்தது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை கப்பல்கள் சூழ்ந்துள்ளதுடன், அந்தப் பகுதியில் கடற்படை கண்காணிப்பும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, ஈரானும் தன்னுடைய நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகிறது.
குறிப்பாக, அந்த கடற்பரப்பில் ஊடாக எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளை எடுத்துச் செல்லும் கப்பல்கள், சுங்கக் கட்டணம் மற்றும் வரிகளை ஈரானுக்கு செலுத்த வேண்டியிருக்கும் என அந்நாடு அறிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்புகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், ஈரானின் அணு ஆயுதத் திட்ட வலையமைப்பு, ஆயுதக் குழுக்கள், ஏவுகணை உற்பத்தி மையங்கள் மற்றும் மீதமுள்ள அச்சுறுத்தல்களையும் இஸ்ரேல் வெற்றிகரமாக இலக்குவைத்து தாக்கியுள்ளதாக அவர் கூறினார்.

எனினும், இன்னும் சில முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டார். சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளின் மதிப்பீட்டின்படி, ஈரானிடம் சுமார் 970 பவுண்டுகள் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது அணு வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான அளவாக இருக்கக்கூடும் என்பதால், மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜெருசலேமில் தொடர்ந்து கவலை நிலவி வருகிறது.
இந்தப் பிரச்சினைக்கு ஒரு உடன்படிக்கை மூலம் தீர்வு காணப்படுமானால், அது சிறந்த முன்னேற்றமாக அமையும் எனத் தெரிவித்த நெதன்யாகு, “அச்சுறுத்தல் நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதி செய்வதே முக்கியம்” என்றார்.
அதேவேளை, இதற்கான காலக்கெடு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்போவதில்லை என்றும், அமெரிக்காவுடன் எந்தவித மோதல் நிலையும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.