IPL கிரிக்கெட் போட்டி ; அனைத்து துடுப்பாட்ட வீரர்களினதும் துடுப்பாட்ட மட்டைகளைப் பரிசோதிக்கத் தீர்மானம்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின்போது, அனைத்து துடுப்பாட்ட வீரர்களினதும் துடுப்பாட்ட மட்டைகளைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொடரில் பங்கேற்றுள்ள நடுவர்களுக்கு இடையிலான மீளாய்வு கூட்டத்தில் அண்மையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் களத்தில் இறங்குவதற்கு முன்பாக நான்காவது நடுவரால் அவர்களின் மட்டைகள் சோதிக்கப்படும்.
அதேநேரம், ஏனைய புதிய துடுப்பாட்ட வீரர்களின் மட்டைகளும் களத்தில் உள்ள நடுவர்களால் சரிபார்க்கப்படும். முன்னதாக போட்டிக்கு ஒருநாள் முன்பாக நான்காவது நடுவர் ஓய்வறைக்குள் வீரர்களின் மட்டைகளைப் பரிசோதிக்கும் நடைமுறை காணப்பட்ட நிலையில் தற்போது இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் பெரிய துடுப்புகளை சில வீரர்கள் பயன்படுத்துவதாக, சில அணிகளால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, சுனில் நரைன் மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோரின் மட்டை, இவ்வாறான சோதனையில் தோல்வியடைந்தமை கண்டறியப்பட்டிருந்தது.