ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணியைக் கதறவிட்ட ராஜஸ்தான்...61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் திகதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்த போட்டி மும்பையில் உள்ள மஹாஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இந்த தொடரில் தங்கள் முதல் போட்டியை இன்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 20 ஓட்டங்களில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 35 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுண்டரிகளாக பறக்கவிட்டார் . அவர் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுபக்கம் ஐதராபாத் பந்துவீச்சாளர்களை தேவ்தத் படிக்கல் துவம்சம் செய்தார்.
அவர் 29 பந்துகளில் 41 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஹெட்மயர் 13 பந்துகளில் 32 ஓட்டங்களில் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்கள் குவித்தது.
இதன் மூலம் ஐதராபாத் அணிக்கு 211 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. அதனை தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதல் தடுமாற்றத்தை சந்தித்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.